Apr 29, 2008

விடைகொடு!!!

இன்று, April 25, காலை எழுந்ததிலிருந்தே ஹேமாவின் முகம் பார்த்து பேச முடியாமல் தவிர்த்தேன். காரணம் பரபரப்பா? ஏக்கமா? இல்லை அழுது விடுவேனென்ற பயமா? எனக்கு புரியவில்லை. நிதானமாக செயல் படமுடியாமல் காலம் ஓட்டத்திற்கு ஏற்றார்போல் வேகமாக ஓடவேண்டியதாயிற்று. சுதாரித்து பார்த்த பொழுது மாலை மணி ஏழு. மீதி இருக்கும் சில மணி நேரத்தையாவது ஊரிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பா, மாமா, தரணி ஆகியோருடன் செலவிட முயற்சித்தேன்.

மிக நீண்ட நாளை நோக்கிய என் பயணம் சுமார் மாலை 9:30 மணிக்கு துவங்கியது. கிளம்பும்போதே ஏதோ உணர்ந்தவனாய் கிர்திக் என்னை தொற்றிக்கொண்டு யாரிடமும் போக மறுத்து விட்டான். அவனை ஏமாற்றித்தூங்க வைத்து ஹேமாவிடம் கொடுத்தேன். என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கவே, சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று உள்ளே சென்றேன். நான் கூட்டத்தில் தொலைந்த பின்னரும் கையசைத்து விடைகொடுத்தார்கள் ஹேமாவும் அம்மாவும். அவர்கள் சென்ற பின்னரும் அவர்களை தேடி ஏமார்ந்தது என் கண்கள்.

விமான பயணத்தை பற்றிய சில குழந்தைத் தனமான என் கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்தன. உதாரணமாக நாம் பயணம் செய்யும் விமானத்தை எப்படிப் கண்டுபிடிப்பது? (எண் மற்றும் பெயர் பலகைகளோ இல்லையே? :) )

விமானத்தின் உள்ளமைப்பு நம்மவூர் 'Volvo' பேருந்துகளைப்போல இருந்தது. இந்திய அழகிகளை எதிர்பார்த்துப் போன எனக்கு அன்னிய முகங்களே வரவேற்றன. ஜன்னலோர இருக்கையும் கிடைத்தது. உலகை வேடிக்கை பார்க்க விடியும் வரை காத்திருக்க வேண்டும்.

முன்று மணி நேரம் தனிமைக்குப்பின் சுமார் நல்லிரவு 1:30 மணியளவில் சென்னையை அழகாகக் காட்டிவிட்டு தன் பயணத்தை தொடங்கியது 'லுவ்தான்சா'. 'Run way'யில் வேகமெடுத்த பொழுதும் 'Take-off' ஆனவுடன் எதிர் திசைக்கு திரும்பிய பொழுதும் 'Roller Coster' உணர்வு ஏற்பட்டது.

இன்றைய பரபரப்பின் அசதியில் பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தூங்கிப்போனேன். கண் விழித்து பார்த்த பொழுது மங்களான ஒழியில் அனைத்து பயணிகளும் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. என் ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தது. விடிந்து விட்டதா என அறிய ஜன்னல் கதவுகளை சற்றே திருந்த வினாடியில் வெளிச்சம் பரவியது. சற்றே பயந்தவனாய் அடைத்துவிட்டு மீண்டும் தூங்கிப்போனேன்.

No comments: